செய்திகள்
குமாரசாமி

மந்திரி பி.சி.பட்டீல் மன்னிப்பு கேட்க வேண்டும்: குமாரசாமி

Published On 2020-12-04 02:13 GMT   |   Update On 2020-12-04 02:13 GMT
விவசாயிகள் கோழைகள் என்று கூறியதற்காக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கிராம பஞ்சாயத்து தேர்தலையொட்டி பா.ஜனதா கிராம சுவராஜ்ஜியம் பெயரில் மாநாடுகளை நடத்தி வருகிறது. மகாத்மா காந்தியின் இந்த எண்ணத்தை பா.ஜனதா பிரதிபலிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியை பலப்படுத்தும் நோக்கம் கொண்ட இந்த மாநாடுகள் மூலம் கிராமங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க பா.ஜனதா நடவடிக்கை எடுக்க வேண்டும். வட கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மந்திரிகள் நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும். விவசாயிகள் பிறப்பிலேயே சுயமரியாதைக்காரர்கள். கடன் கொடுத்தவர்கள் மரியாதை குறைவாக பேசிவிடுவார்கள் என்று பயந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கூறுவது போல் அவர்கள் கோழைகள் அல்ல.

மனைவி, குழந்தைகள், ஊர்க்காரர்கள், உறவினர்கள் முன்பு தனது மரியாதை போய்விட்டதே என்று கருதி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மந்திரி பி.சி.பட்டீலின் கருத்து விவசாயிகளை அவமானப்படுத்துவது ஆகும். விவசாயிகள் அரசியல்வாதிகளை போல் ஆட்சி அதிகாரத்திற்காக தனது நிலையை மாற்றுவது இல்லை. நிலத்தையே நம்பி கஷ்டப்படுபவர்கள் தான் விவசாயிகள். இத்தகைய விவசாயிகளை முன்னேற்ற மத்திய-மாநில அரசுகள் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். அதை விடுத்து அவர்களுக்கு கோழை பட்டப்பெயரை சூட்டுவது சரியல்ல. மந்திரி பி.சி.பட்டீலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News