செய்திகள்
எடியூரப்பா

குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம்- எடியூரப்பா அடிக்கல் நாட்டினார்

Published On 2020-12-03 02:28 GMT   |   Update On 2020-12-03 02:28 GMT
பிடதியில் ரூ.260 கோடியில் குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்ட பணிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா அடிக்கல் நாட்டினார்.
பெங்களூரு 

கர்நாடக மின் பகிர்மான கழகம் சார்பில் பெங்களூரு அருகே உள்ள பிடதியில் குப்பையில் இருந்து மின் உற்பத்தி செய்யும் 11.5 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

பெங்களூரு, ஆசியாவிலேயே வேகமாக வளரும் நகரமாக உள்ளது. இங்கு தினமும் 5,000 டன் குப்பைகள் சேகரமாகிறது. குப்பைகளை சரியான முறையில் நிர்வகிக்காவிட்டால் நிலத்தடி நீரின் தரம் குறைந்துவிடும். குப்பையில் இருந்து உயிரி எரிபொருள், உரம், மின்சாரம் போன்றவற்றை உற்பத்தி செய்ய முடியும். இந்த மின் உற்பத்தி நிலையத்தில் தினமும் 600 டன் குப்பைகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதில் இருந்து 11.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. பெங்களூருவில் உற்பத்தியாகும் குப்பையில் 25 சதவீதம் இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படும்.

அதாவது 80.59 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை. இந்த திட்டத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வருகிற 2022-ம் ஆண்டுக்குள் மின் உற்பத்தி செய்யப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.260 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்ட மதிப்பீட்டில் கர்நாடக மின்பகிர்மான கழகம் மற்றும் பெங்களூரு மாநகராட்சி தலா 50 சதவீத தொகையை வழங்கும்.

இந்த திட்டத்தால் குப்பையை நிர்வகிப்பதில் பெங்களூரு மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.14 கோடி மிச்சமாகும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 35 சதவீத நிதியும், மாநில அரசு 23.3 சதவீத நிதியும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். சுற்றுச்சூழலை காக்கும் நோக்கத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பான முறையில் நிர்வகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
Tags:    

Similar News