செய்திகள்
கோப்புப்படம்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் - மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

Published On 2020-12-03 00:21 GMT   |   Update On 2020-12-03 00:21 GMT
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுடெல்லி:

மத்திய அரசு புதிதாக நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்கள், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அழிப்பதுடன், விவசாயத்தை பெருநிறுவனங்களுக்கு தாரை வார்த்து விடும் என விவசாயிகள் தொடர்ந்து அச்சம் வெளியிட்டு வருகின்றனர். எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்களையும் ஏறெடுத்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், இந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு உள்ளனர். பெரும் சவால்களை கடந்து டெல்லிக்குள் நுழைந்த அவர்கள் நேற்று 7-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

டெல்லி நிர்வாகம் அனுமதித்த புராரி மைதானத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், டெல்லிக்குள் நுழையும் எல்லைகளிலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்திருக்கின்றனர். குறிப்பாக சிங்கு, திக்ரி உள்ளிட்ட முக்கியமான எல்லைகளை ஆக்கிரமித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

நெடுஞ்சாலைகளிலும், சாலைக்கு அருகிலும் தொடர்ந்து நடத்தி வரும் இந்த போராட்டங்களால் டெல்லியில் இருந்து அரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கான போக்குவரத்து இந்த சாலைகளில் தடைபட்டு இருக்கிறது.

இந்த நிலையில் டெல்லியில் போராடி வரும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து அவர்களுடன் போராட்டத்தை தொடர்வதற்காக உத்தரபிரதேசத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி சென்றனர்.

அவர்கள் டெல்லி-உத்தரபிரதேச எல்லையான காஜிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த எல்லையையும் டெல்லி போலீசார் மூடிவிட்டனர். எனவே டெல்லிவாசிகள் மாற்று சாலைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இது குறித்து டெல்லி போக்குவரத்து போலீசார் நேற்று தங்கள் டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘கவுதம் புத் துவார் அருகே நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தால் நொய்டா இணைப்பு சாலையின் சில்லா எல்லை பகுதி மூடப்பட்டு உள்ளது. எனவே நொய்டா செல்லும் மக்கள் நொய்டா இணைப்பு சாலையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகளின் போராட்டத்தால் சிங்கு, திக்ரி உள்பட 5 எல்லை பகுதிகள் இதுவரை மூடப்பட்டு உள்ளன. பதுசாரை எல்லையில் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இவ்வாறு, டெல்லியை உலுக்கி வரும் விவசாயிகளின் போராட்டத்தால் பல எல்லைகள் மூடப்பட்டு வருவதால் டெல்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் டெல்லிவாசிகள் குறிப்பாக அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் அனைத்து எல்லைகளிலும் ஆயிரக்கணக்கான போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் வேளாண் சட்டங்கள் குறித்த பிரச்சினைகளை ஆராய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் இதை விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என தெரிகிறது. ஏனெனில் இந்த பிரச்சினைகளை கண்டறிந்து தெரிவிக்குமாறு மத்திய அரசு விவசாயிகளிடம் நேற்று முன்தினம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடக்க இருக்கும் நிலையில், இதில் பேச வேண்டிய கருத்துகள் குறித்து டெல்லி சங்கு எல்லை பகுதியில் நேற்று விவசாயிகள் ஆலோசனை நடத்தினர். 32 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

பின்னர் விவசாய அமைப்பு ஒன்றின் தலைவர் தர்ஷன் பால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘விவசாய அமைப்புகளுக்கு இடையே பிரிவினையை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால் அது நடக்காது. இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி எங்கள் போராட்டம் தொடரும். இந்த சட்டங்களை திரும்ப பெறுவதற்காகவும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அந்தஸ்து வழங்க வசதியாகவும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஒன்றை மத்திய அரசு கூட்ட வேண்டும்’ என்று கூறினார்.

மற்றொரு அமைப்பின் தலைவரான குர்னம் சிங் சடோனி கூறும்போது, ‘இந்த புதிய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால், எங்கள் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக வருகிற நாட்களில் மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக தலைநகருக்கு வரும் அனைத்து சாலைகளும் அடைக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்தார்.

விவசாயிகளை அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக கூறியுள்ள விவசாயிகள், தங்கள் கோரிக்கை நிறைவேறினால் மட்டுமே டெல்லியில் இருந்து திரும்புவோம் என கூறியுள்ளனர். மேலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி (சனிக்கிழமை) நாடு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

டெல்லியில் ஒரு வாரத்துக்கு மேலாக முகாமிட்டிருக்கும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று நடத்தும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டு போராட்டம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டு உள்ளது.
Tags:    

Similar News