செய்திகள்
கொரோனா தடுப்பூசி

அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் இல்லை -சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

Published On 2020-12-02 04:50 GMT   |   Update On 2020-12-02 04:50 GMT
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து வழங்குவது குறித்து அரசு ஒருபோதும் பேசவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் கூறினார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து யாருக்கு முதலில் வழங்குவது என்பது தொடர்பாக அரசு ஒரு முன்னுரிமை பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் சுமார் 1 கோடி சுகாதார பணியாளர்கள், போலீஸ் மற்றும் ஆயுதப்படை வீரர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டில் உள்ள அனைவருக்கும் எப்போது கொரோனா தடுப்பூசி போடப்படும்? என செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ராஜேஷ் பூஷன், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து வழங்குவது குறித்து அரசு ஒருபோதும் பேசவில்லை என்றார்.

விஞ்ஞானம் தொடர்பான தலைப்புகளைப் பற்றி விவாதிப்பதற்கு முன்பு, அதைப் பற்றிய உண்மைத் தகவல்களை அறிந்து பின்னர் அதை பகுப்பாய்வு செய்வது நல்லது என்றும் அவர் கூறினார்.

கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்களுக்குத் தடுப்பு மருந்து செலுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்க அரசு விரும்புவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்தார்.

மக்கள் தொகையில் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்தால், ஒட்டு மொத்த மக்கள் தொகைக்கும் தடுப்பு மருந்து செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News