செய்திகள்
அஸ்வத் நாராயண்

கர்நாடகத்தில் புதிய தேசிய கல்வி கொள்கை விரைவில் அமல்: அஸ்வத் நாராயண்

Published On 2020-12-01 03:40 GMT   |   Update On 2020-12-01 03:40 GMT
கர்நாடகத்தில் புதிய தேசிய கல்வி கொள்கை விரைவில் அமல்படுத்தப்படுவது உறுதி என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய கல்வி கொள்கையை கர்நாடகத்தில் அமல்படுத்துவதற்காக முன்னாள் தலைமை செயலாளர் ரங்கநாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவினர் புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து வந்தது. இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து அந்த குழுவின் தலைவரான ரங்கநாத் மற்றும் நிபுணர்கள் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான அறிக்கையை வழங்கினார்கள்.

பின்னர் அந்த அறிக்கையை மந்திரிசபை முன்வைத்து ஒப்புதல் பெறும்படி துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மந்திரி சுரேஷ்குமாருக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டார். அதன்படி, அடுத்து நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி அரசு அமைத்துள்ள குழுவின் உறுப்பினர் ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறுகையில், ‘175 ஆண்டுகள் பழமையான கல்வி முறையை மத்திய அரசு மாற்றியுள்ளது. அந்த புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்கான சிறப்பான முடிவை அரசு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அரசின் இந்த முடிவு கர்நாடக கல்வித்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்,’ என்றார்.

இதுகுறித்து துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களிடம் கூறும் போது, ‘மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் முதல் மாநிலமாக கர்நாடகம் இருக்கும் என்று ஏற்கனவே நான் கூறி வருகிறேன். தற்போது அரசு அமைத்த குழுவினர் தங்களது அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அந்த குழுவினர் அறிக்கைக்கு விரைவில் அரசு ஒப்புதல் அளிக்கும். கூடிய விரைவில் கர்நாடகத்தில் புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படுவது உறுதி,’ என்றார்.
Tags:    

Similar News