செய்திகள்
கோப்புப்படம்

நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் டாக்சிகள் ஓடாது - அகில இந்திய சங்கம் எச்சரிக்கை

Published On 2020-12-01 02:20 GMT   |   Update On 2020-12-01 03:06 GMT
விவசாயிகளின் பிரச்சினைக்கு 2 நாட்களுக்குள் தீர்வு காணாவிட்டால், 3-ந்தேதி முதல் நாடு முழுவதும் டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய டாக்சி யூனியன் அறிவித்து உள்ளது.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 5 நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களின் பிரதிநிதிகளுடன் 3-ந்தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில் விவசாயிகளின் பிரச்சினைக்கு 2 நாட்களுக்குள் தீர்வு காணாவிட்டால், 3-ந்தேதி முதல் நாடு முழுவதும் டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய டாக்சி யூனியன் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் பல்வந்த் சிங் புல்லார் கூறுகையில், ‘டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு பிரதமர், உள்துறை மந்திரி, வேளாண் மந்திரி ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கிறோம். கார்ப்பரேட் துறை எங்களை அழித்து வருகிறது. 2 நாட்களுக்குள் இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால், நாங்கள் எங்கள் வாகனங்களை சாலைகளில் இருந்து அகற்றி விடுவோம். 3-ந்தேதி முதல் டாக்சிகளை ஓட்ட வேண்டாம் என நாடு முழுவதும் உள்ள டிரைவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News