செய்திகள்
எடியூரப்பா

மந்திரிசபை விரிவாக்கம் மேலும் தள்ளி போகிறதா?: எடியூரப்பா பதில்

Published On 2020-12-01 02:15 GMT   |   Update On 2020-12-01 02:15 GMT
கிராம பஞ்சாயத்து தேர்தல் காரணமாக மந்திரிசபை விரிவாக்கம் மேலும் தள்ளி போகிறதா? என்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு :

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசில் மந்திரிசபை விரிவாக்கம் செய்ய கட்சி மேலிடம் இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளிப்போன வண்ணம் இருக்கிறது. அதே நேரத்தில் மந்திரி பதவிக்காக வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும், மூல பா.ஜனதாவினருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. என்றாலும், இன்னும் சில நாட்களில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் வருகிற 22 மற்றும் 27-ந் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நேற்றே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால் கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிந்த பின்பு தான் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அடுத்த ஆண்டு (2021) ஜனவரியில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், மற்ற நடவடிக்கைகள் எதுவும் தற்போது தொடங்கப்படுவதில்லை. இதன் காரணமாக கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். நாடாளுமன்றம், சட்டசபை தேர்தலை போன்று கிராம பஞ்சாயத்து தேர்தலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கிராம பஞ்சாயத்து தேர்தலில் அதிக கவனம் செலுத்தப்படும். இந்த தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும்.

கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கும், மந்திரிசபை விரிவாக்கத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், மந்திரிசபை விரிவாக்கத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது. இன்னும் ஓரிரு நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News