செய்திகள்
சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி அமித்ஷா கையசைத்த காட்சி.

ஐதராபாத்தில் அமித்ஷா வாகன பேரணி - மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றுவது உறுதி

Published On 2020-11-30 00:12 GMT   |   Update On 2020-11-30 00:12 GMT
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலையொட்டி, அமித்ஷா வாகன பேரணியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றுவது உறுதி என்று அவர் கூறினார்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சமீபத்தில் நடைபெற்ற ஒரு தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்தி பா.ஜனதா வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து, தலைநகரான ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அதில், பா.ஜனதா முழுவீச்சில் களம் இறங்கி உள்ளது.

நேற்று தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாள் ஆகும்.

அதையொட்டி, பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஐதராபாத்துக்கு வந்தார். பழைய ஐதராபாத்தில் உள்ள பாக்யலட்சுமி தேவி கோவிலில் வழிபட்டார்.

பின்னர், செகந்திராபாத் நகரில் வாகன பேரணியாக சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்துக்கு இடையே டி.வி. சேனல்களுக்கு அமித்ஷா பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் 4 தொகுதிகளில் பா.ஜனதாவை மக்கள் வெற்றி பெற வைத்தனர். அதை வைத்து பார்க்கும்போது, மாற்றத்துக்கான தொடக்கம் ஆரம்பித்து விட்டது. ஐதராபாத் மாநகராட்சி தேர்தல், அடுத்த களம் ஆகும்.

ஐதராபாத் மக்கள் நல்ல நிர்வாகத்தை விரும்புகின்றனர். மோடி தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இங்கு வந்திருக்கும் மக்கள் கூட்டத்தை வைத்து பார்க்கும்போது, ஐதராபாத் மேயர் பதவியில் பா.ஜனதா வேட்பாளர் அமர்வது உறுதி என்று தோன்றுகிறது.

ஐதராபாத் நகரில் பல்லாண்டுகளாக அடிப்படை வசதிகளே இல்லை. ஒரு கட்சியின் ஆசியுடன் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

இதனால், ஐதராபாத் மக்கள், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி மீதும், ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மீதும் கோபத்தில் உள்ளனர். அதனால், மேயர் பதவிக்கு பா.ஜனதாவை தேர்ந்தெடுப்பார்கள்.

மழையின்போது, 7 லட்சம் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அப்போது, முதல்-மந்திரி சந்திரசேகர ராவும், ஒவைசியும் எங்கே போனார்கள்? பா.ஜனதா எம்.பி.க்களும், தொண்டர்களும்தான் மக்களுக்கு உதவினார்கள்.

பா.ஜனதாவுக்கு வாய்ப்பு அளித்தால், ஐதராபாத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஐதராபாத், உலகளாவிய தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றப்படும். நவீன நகரமாக தரம் உயர்த்தப்படும்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.
Tags:    

Similar News