செய்திகள்
வெங்கையா நாயுடு

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் - டெல்லியில் இன்று தொடங்குகிறது

Published On 2020-11-29 00:58 GMT   |   Update On 2020-11-29 00:58 GMT
6 நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
புதுடெல்லி:

இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் அமைப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு.

இந்த நாட்டு தலைவர்களின் 19-வது கூட்டம், டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்துக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்குகிறார். காணொலி காட்சி வழியாக நடைபெறுகிற இந்த கூட்டத்தில் ரஷியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளின் பிரதமர் கலந்துகொள்கிறார்கள். பாகிஸ்தான் சார்பில் அதன் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற செயலாளர் கலந்து கொள்கிறார்.

ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய 4 நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக கலந்துகொள்கிறார்கள். இதில் உறுப்பு நாடுகளின் வர்த்தக, பொருளாதார செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. நாளை கூட்டு பிரகடனத்துடன் இந்த கூட்டம் நிறைவு பெறுகிறது. கடந்த 10-ந்தேதிதான் இந்த அமைப்பின் உச்சிமாநாடு, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றதும், இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக பங்கேற்றதும் நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News