செய்திகள்
கோப்பு படம்

2 வாரங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி - சீரம் இன்ஸ்டிடியூட்

Published On 2020-11-28 15:26 GMT   |   Update On 2020-11-28 15:26 GMT
அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் விநியோகிக்கும் உரிமத்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.
ஐதராபாத்:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் மூன்று 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார்.

இந்த நிறுவனம் தயாரிக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் 2-வது கட்ட பரிசோதனையின் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிந்தார். 

இதை தொடர்ந்து தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் சென்ற பிரதமர் ஜெனோம் வேலி பகுதியில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு சென்றார். 

இந்த நிறுவனம் தயாரித்து வரும் ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி, 3-வது கட்ட பரிசோதனையில் உள்ளது. அதன் முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். பாரத் பயோடெக் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இதை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு பிரதமர் மோடி சென்றார். இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமத்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பெற்றுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ள ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது. அதன் முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். சீரம் நிறுவனத்திற்கு பிரதமர் பயணம் மேற்கொண்டபோது அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா உடன் இருந்தார்.

இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தனியார் செய்தி நிறுவனத்திற்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவிஷீல்டு தடுப்பூசியை இன்னும் 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர விண்ணப்பிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இந்திய அரசு தற்போதுவரை எங்களிடம் இருந்து எவ்வளவு கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்வார்கள் என்ற எழுத்துப்பூர்வ தகவல்கள் இல்லை. ஆனால், 2021  ஜூலை மாதத்திற்குள் இந்திய அரசு எங்களிடம் இருந்து 30 முதல் 40 கோடி கொவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்கும் என எதிர்பார்க்கிறோம்.

தடுப்பூசி முதலில் இந்தியாவில் விநியோகிக்கப்படும். அதன்பின் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை கொடுக்கும் நடவடிக்கையில் இறங்குவோம். 

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசியை விநியோகிக்கும் நடவடிக்கையை அஸ்ட்ரா ஜெனேகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கவனித்துக்கொள்ளும். இந்தியா மற்றும் ஆப்பிரிக்க
நாடுகளே எங்களுக்கு முக்கியமான இடங்கள்.

என்றார்.
Tags:    

Similar News