செய்திகள்
போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு... டெல்லி புராரி மைதானத்தில் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்

Published On 2020-11-28 03:45 GMT   |   Update On 2020-11-28 09:02 GMT
டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்த புராரி மைதானத்தில் விவசாயிகள் குவியத் தொடங்கி உள்ளனர்.
புதுடெல்லி:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி நோக்கி பேரணி நடத்தி, டெல்லியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்தன. அதன்படி பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களிலும், நடந்தும் டெல்லியை நோக்கி சென்றனர். 

ஆனால் இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை முதலில் அனுமதி அளிக்கவில்லை. எல்லைகளில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி டெல்லியை நோக்கி புறப்பட்ட விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். இதனால் எல்லையில் பதற்றம் உருவானது. வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. எனினும், விவசாயிகள் பின்வாங்காமல் எல்லையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். 

எத்தனை நாட்கள் ஆனாலும் டெல்லிக்கு செல்வதில் உறுதியாக இருந்தனர். பல நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்களை டிராக்டர்களில் ஏற்றிக்கொண்டு வந்திருந்தனர். 

நிலைமை தீவிரமடைந்த நிலையில், விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் டெல்லிக்குள் நுழைவதற்கு காவல்துறை நேற்று மாலை அனுமதி அளித்தது. விவசாயிகள் அமைதியான முறையில் டெல்லி புராரி பகுதியில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதாக டெல்லி கமிஷனர் தெரிவித்தார். 

அதன்பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் எல்லையில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் புறப்பட்டனர். டிராக்டர்களுடன் புராரி மைதானத்திற்கு வந்து சேர்ந்த விவசாயிகள், இன்று காலை போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து விவசாயிகள் மைதானம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படாத வரை போராட்டம் தொடரும் என்றும் நீண்டகால போராட்டத்திற்கு தயார் நிலையில் வந்திருப்பதாகவும் போராட்டக்களத்தில் உள்ள ஒரு விவசாயி தெரிவித்தார். 

சிங்கு எல்லையில் (டெல்லி-அரியானா எல்லை) போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் ஏராளமானோர் இன்று காலையில் திரண்டு கூட்டம் நடத்தினர். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த வரும்படி விவசாய சங்கங்களுக்கு வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News