செய்திகள்
பிரதமர் மோடி

5 கொரோனா நோயாளிகள் கருகி பலி- பிரதமர் மோடி வேதனை

Published On 2020-11-28 00:48 GMT   |   Update On 2020-11-28 00:48 GMT
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் நடந்த கோர தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் கருகி உயிரிழந்தனர். இதற்கு பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
ஆமதாபாத்:

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உதய் சிவானந்த் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 31 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் அந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்தது. அனல் பரவியதில், அங்கு தூங்கிக்கொண்டிருந்த நோயாளிகள் பதறியடித்துக்கொண்டு எழுந்து அலறினர்.

மளமளவென தீ மற்ற இடங்களுக்கு பரவுவதற்குள் தகவல் அறிந்த தீயணைக்கும் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இருப்பினும் இந்த கோரத்தீ விபத்தில் சிக்கி 5 கொரோனா நோயாளிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

எஞ்சிய நோயாளிகள் 26 பேர், தீயணைக்கும் படையினரால் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக பிற கொரோனா ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்சுகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ராஜ்கோட் ஆஸ்பத்திரியில் நடந்த தீவிபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக நிர்வாகம் உறுதி அளித்துள்ளது” என கூறி உள்ளார்.

இந்த தீ விபத்துக்கு முதல்-மந்திரி விஜய் ரூபானி வருத்தம் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

வென்டிலேட்டரில் ஏற்பட்ட மின்கசிவுதான் இந்த தீ விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என துணை முதல்-மந்திரி நிதின் படேல் தெரிவித்தார்.

இந்த தீவிபத்து பற்றி மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.கே. ராகேஷ் விசாரணை நடத்துவார் என முதல்-மந்திரி அலுவலக செய்திக்குறிப்பு கூறுகிறது.
Tags:    

Similar News