செய்திகள்
அஸ்வத் நாராயண்

எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: அஸ்வத் நாராயண் திட்டவட்டம்

Published On 2020-11-27 02:11 GMT   |   Update On 2020-11-27 02:11 GMT
முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. இதில் எந்த குழப்பமும் இல்லை என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா நீடிப்பார். அவரே எங்கள் தலைவர். அவரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. இதில் எந்த குழப்பமும் இல்லை. மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எடியூரப்பா முடிவு செய்வார். தோல்வி அடைந்தவர்களுக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று சொல்கிறார்கள். தகுதி உள்ளவர்களுக்கு பதவி கிடைக்கும். இந்த விஷயத்தில் எங்கள் கட்சி மேலிடம் முடிவு செய்யும். அந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும்.

அவருக்கும் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் பா.ஜனதாவை பலப்படுத்த உழைத்துள்ளார். எங்கள் கட்சியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எம்.எல்.ஏ.க்கள் யாரும் கோஷ்டி அரசியலை நடத்தவில்லை. சிலர் மந்திரி பதவி வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதில் தவறு இல்லை. அதுகுறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும். மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

இதற்கிடையே ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கூறுகையில், “எனக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கட்சியிடம் கேட்டுள்ளேன். எங்கள் கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீலை சந்தித்து ஒரு மணி நேரம் பேசினேன். நான் 3 முறை எம்.எல்.ஏ. ஆகியுள்ளேன். எனக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன்“ என்றார்.
Tags:    

Similar News