மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு
பதிவு: நவம்பர் 26, 2020 22:07
உச்சநீதிமன்றம்
புதுடெல்லி:
தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் தொலைதூரப் பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்திய மருத்துவக் குழுவின் 2000-ஆவது ஆண்டின் மருத்துவ பட்ட மேற்படிப்பு விதிகளைக் காரணம் காட்டி ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 50% ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில், மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அரசாணையை ரத்து செய்யக்கோரியும் மத்திய அரசு மற்றும் சில மருத்துவ சங்கங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு புதன்கிழமை விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.