செய்திகள்
பிரதமர் மோடி

’கோவிஷீல்டு’ தடுப்பூசி தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி

Published On 2020-11-26 13:04 GMT   |   Update On 2020-11-26 13:07 GMT
புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ’கோவிஷீல்டு’ தடுப்பூசி தயாரிப்பு பணிகளை பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி பார்வையிடுகிறார்.
புதுடெல்லி: 

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலகின் பலநாடுகள் முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும்,  அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது. 

இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைகள் உலக அளவில் பல நாடுகளில் தற்போது நடைபெற்று வருகிறது. 3-ம் கட்ட பரிசோதனையின் இடைக்கால முடிவுகளை அஸ்ட்ரா ஜெனேகா கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. 

கொரோனா பாதிக்கப்பட்ட 131 பேரிடம் தடுப்பூசி செலுத்தி நடத்திய பரிசோதனையில் தடுப்பூசி 70.4 சதவீதம் செயல் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு வெளியாகியுள்ளது.

முதல் டோஸ் முறையில் ஒரு மாத இடைவெளியில் 2 முறை முழு அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் 62 சதவீதம் செயல்திறன் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

இதையடுத்து இரண்டாவது டோஸ் முறையில் ஒரு மாத இடைவெளியில் முதல்முறை பாதி அளவில் தடுப்பூசியும் இரண்டாவது முறை முழு அளவில் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் செயல்திறன் கொண்டதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்யும் உரிமத்தை புனேவை தலைமையிடமாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பெற்றுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட்டில் கொரோனா தடுப்பூசியின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசிக்கு  கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு பணிகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி ஆய்வு செய்கிறார். இதற்காக பூனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டிற்கு வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி வர உள்ளார். அங்கு நடைபெறும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

இத்தகவலை புனே மாவட்ட அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பயணத்தின் போது கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்புகள், அவற்றின் பாதுகாப்பு, பக்கவிளைவுகள் குறித்து பிரதமர் கேட்டறிவார் என்று தெரிகிறது.

மேலும், இந்தியாவிற்கு குறைந்த விலையிலும், முன்னுரிமை அடிப்படையிலும் தடுப்பூசி வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் 
விஞ்ஞானிகளுடன் பிரதமர் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News