செய்திகள்
விவசாயிகள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்த காட்சி

டெல்லி பேரணிக்காக டிராக்டர்களில் சென்ற விவசாயிகள்... எல்லையில் தடுத்து விரட்டியடிக்கும் போலீஸ்

Published On 2020-11-26 11:10 GMT   |   Update On 2020-11-26 11:10 GMT
டெல்லியில் பேரணி நடத்துவதற்காக தடையை மீறி புறப்பட்ட விவசாயிகளை போலீசார் எல்லையில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பும் பதற்றமும் உருவானது.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதுதொடர்பாக விவசாய சங்கங்களின் தலைவர்கள், மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் மற்றும் வர்த்தக துறை மந்திரி சோம் பிரகாஷ் ஆகியோரை சந்தித்து பேசியதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனையடுத்து டெல்லியில் மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்தனர். இன்றும் நாளையும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. பாரதிய கிசான் யூனியன், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகள் இதற்காக அழைப்பு விடுத்தன. அதன்படி விவசாயிகள் டெல்லி நோக்கி இன்று காலை முதலே டிராக்டரிலும் மற்றும் நடந்தும் பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். 

ஆனால் இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டெல்லி நோக்கிச் செல்லும் அனைத்து பாதைகளையும், பஞ்சாபில் இருந்து அரியானா மாநிலத்திற்குள் நுழையும் அனைத்துப் பாதைகளையும் போலீசார் அடைத்தனர். பொதுமக்களின் வாகனங்கள் மட்டும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டன. 

டெல்லி மற்றும் அரியானா எல்லை பகுதியான சிங்கு எல்லை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டனர். வாகனங்கள் சோதனையிடப்பட்டன. ஆளில்லா விமானம் மூலமாகவும் போராட்டக்காரர்களை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், அரியானாவின் அம்பாலா பகுதியருகே சம்பு எல்லை பகுதியில் திரண்டு வந்த விவசாயிகளை கலைந்து போகும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.  ஆனால், அவர்கள் செல்லவில்லை.  அதற்கு பதிலாக போலீசார் தடுப்புக்காக போட்டிருந்த தடுப்பான்களை பாலத்தில் இருந்து தூக்கி கீழே போட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.  சிலர் கொடிகளை ஏந்தியபடி முன்னேற முயன்றனர்.  ஆனால், போலீசார் தொடர்ந்து நீரை பாய்ச்சி அடித்தனர்.  இதனால், போராட்டக்காரர்கள் அங்குமிங்கும் அலைந்தனர்.

இதேபோன்று டெல்லி செல்லும் வழியில் கர்னால் என்ற இடத்தில் விவசாயிகள் குவிந்தனர்.  அவர்கள் அந்த பகுதி வழியே டெல்லி நோக்கி டிராக்டர்களில் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை செல்ல விடாமல் சாலையில் தடுப்பான்கள் போட்டு போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்களும், அந்த வழியே செல்பவர்களும் பாதிக்கப்பட்டனர். 

விவசாயிகள் பின்வாங்கப்போவதில்லை என கூறியதால் அவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர். ஆனாலும் அங்கேயே விவசாயிகள் முகாமிட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து டெல்லியை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.
Tags:    

Similar News