மரடோனா தனது வாழ்நாள் முழுவதும் கால்பந்து களத்தில் சில சிறந்த விளையாட்டு தருணங்களை நமக்கு கொடுத்ததாக இந்திய பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவு -மோடி இரங்கல்
பதிவு: நவம்பர் 26, 2020 10:01
பிரதமர் மோடி
புதுடெல்லி:
கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறந்த மரடோனா தனது 60வது வயதில் காலமானார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான மரடோனா, கடந்த மாதம் மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று ஏற்பட்ட மாரடைப்பால் அவர் காலமானார். அவரது மறைவுக்கு விளையாட்டு பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கால்பந்தின் மேஸ்ட்ரோவான மரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மரடோனா தனது வாழ்நாள் முழுவதும் கால்பந்து களத்தில் சில சிறந்த விளையாட்டு தருணங்களை நமக்கு கொடுத்ததாகவும், அவரது அகால மறைவு நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும், அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1986ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்த மரடோனா, உலக கால்பந்து அரங்கில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு நிகராக பார்க்கப்பட்டவர்.
அவர் 4 உலக கோப்பை போட்டியில் (1982, 1986, 1990, 1994) பங்கேற்று அர்ஜென்டினா அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா, நபோலி, செவில்லா உள்ளிட்ட கிளப் அணிகளுக்காக களம் கண்டு இருக்கும் அவர் மொத்தம் 491 கிளப் போட்டிகளில் ஆடி 259 கோல்கள் அடித்து இருக்கிறார்.
Related Tags :