செய்திகள்
ரேணுகாச்சார்யா

ரேணுகாச்சார்யா வீட்டில் 10 எம்.எல்.ஏ.க்கள் திடீர் ஆலோசனை

Published On 2020-11-26 02:14 GMT   |   Update On 2020-11-26 02:14 GMT
மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற உள்ள நிலையில் ரேணுகாச்சார்யா வீட்டில் 10 எம்.எல்.ஏ.க்கள் கூடி திடீரென ஆலோசனை நடத்தினர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. பா.ஜனதா ஆட்சிக்கு 105 எம்.எல்.ஏ.க்களே காரணம் என்று கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவியை கைப்பற்றும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி டெல்லி சென்றுள்ளார். அவர் சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி பெற்றுத்தர தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் பெங்களூரு வீட்டில் நேற்று சுமார் 10 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினர். மந்திரி பதவியை கைப்பற்ற என்ன செய்யலாம் என்று அவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். அவர்கள் ஏற்கனவே முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து தங்களுக்கு மந்திரிசபையில் இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனைக்கு பிறகு ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து வந்த 17 எம்.எல்.ஏ.க்களை நாங்கள் மதிக்கிறோம். அவர்களுக்கு உரிய மரியாதையை கட்சி வழங்கியுள்ளது. ஆனால் தன்னால் தான் பா.ஜனதா ஆட்சி அமைந்தது என்று அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. எங்கள் கட்சியில் 105 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றோம். இந்த 105 பேர்களால் தான் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததை யாரும் மறக்கக்கூடாது. எங்கள் கட்சியின் தேசிய தலைவர், முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மாநில நிர்வாகிகளின் உழைப்பால் பா.ஜனதா ஆட்சி மலர்ந்தது. அதனால் பா.ஜனதா ஆட்சி அமைந்ததற்கு 105 எம்.எல்.ஏ.க்களே காரணம்.

இந்த 105 எம்.எல்.ஏ.க்களுக்கு தான் முதல் முன்னுரிமை. அதன் பிறகு தான் மற்றவர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். எங்கள் கட்சி தொண்டர்களின் உழைப்பால் 105 பேர் வெற்றி பெற்றுள்ளோம். சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறியுள்ளார். இது அவரது கருத்து. யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதை பா.ஜனதா மேலிடம் முடிவு செய்யும். கட்சியை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை.

நாங்கள் எங்கள் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து, எங்களின் கருத்தை கூறியுள்ளோம். மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, தேர்தலில் மக்கள் மூலம் நேரடியாக வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். எங்கள் கருத்தையும் கட்சி மேலிடம் மதிக்கும் என்று நம்புகிறோம். எனது வீட்டில் 10 எம்.எல்.ஏ.க்கள் இன்று(அதாவது நேற்று) ஆலோசனை நடத்தினோம். மதிய உணவு சாப்பிட்டோம். நாங்கள் ரெசார்ட்டுக்கு செல்லவில்லை.

இவ்வாறு ரேணுகாச்சார்யா கூறினார்.

மந்திரி பதவியை பெற ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜனதாவை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் அந்த அணியில் யாருக்கும் மந்திரி பதவி கிடைக்காது என்றே சொல்லப்படுகிறது. மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, அவர்களுக்கு இடம் கிடைக்காவிட்டால், அவர்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிலை உள்ளது.

அவ்வாறு போர்க்கொடி தூக்கினால், எடியூரப்பா அரசுக்கு சிக்கல் ஏற்படுவது உறுதி. ஏனென்றால், சட்டசபையில் பா.ஜனதாவுக்கு 119 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பெரும்பான்மை பலத்திற்கு 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இந்த 10 எம்.எல்.ஏ.க்கள் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டால், எடியூரப்பா அரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News