செய்திகள்
வாட்டாள் நாகராஜ்

கர்நாடகத்தில் திட்டமிட்டபடி வருகிற 5-ந் தேதி முழு அடைப்பு

Published On 2020-11-26 01:57 GMT   |   Update On 2020-11-26 01:59 GMT
மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்கும் முடிவை வாபஸ் பெறக்கோரி கர்நாடகத்தில் திட்டமிட்டபடி வருகிற 5-ந் தேதி முழு அடைப்பு நடத்துவது என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
பெங்களூரு :

கர்நாடக மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். இதற்கு கன்னட சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநில அரசின் இந்த முடிவை கண்டித்து வருகிற 5-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு பிற கன்னட சங்கங்கள் ஆதரவு வழங்கவில்லை.

இந்த நிலையில் முழு அடைப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கன்னட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி கர்நாடகத்தில் வருகிற 5-ந் தேதி முழு அடைப்பு நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதுகுறித்து வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்கும் முடிவை வாபஸ் பெறக்கோரி வருகிற 5-ந் தேதி கர்நாடகத்தில் திட்டமிட்டபடி முழு அடைப்பு நடத்தப்படும். அன்றைய தினம் காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு நடைபெறும். இந்த முழு அடைப்பை தோற்கடிக்க மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. எங்களுக்கு எதிராக மாநில அரசை நடத்துகிறவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். நாங்கள் பேச ஆரம்பித்தால் இந்த அரசு நீடிக்காது.

மராட்டிய சமூக மேம்பாட்டு வாரியம் அமைப்பது குறித்து சட்டசபை கூட்டத்திலோ அல்லது அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டியோ ஆலோசிக்கவில்லை. மாநில அரசு தன்னிச்சையாக இந்த விஷயத்தில் முடிவு எடுத்துள்ளது. இதை ஏற்க முடியாது. சட்டசபை இடைத்தேர்தலை மனதில் வைத்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. பசவ கல்யாண் தொகுதியின் வளர்ச்சி குறித்து இந்த அரசு ஆலோசிக்கவில்லை. அதை மறந்துவிட்டு மராட்டிய மக்களின் ஓட்டுகளை பெற இந்த வாரியத்தை அரசு அமைக்கிறது.

கர்நாடகத்தை பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை. அதனால் அனைத்து கன்னட அமைப்புகளும் ஓர் அணியில் திரண்டு போராட வேண்டியது அவசியம். கர்நாடக ரக்‌ஷண வேதிகே அமைப்பு நிர்வாகிகளுடனும் விவாதித்தேன். அரசு எங்களை மிரட்ட முயற்சி செய்கிறது. அதை கண்டு நாங்கள் பயப்படவில்லை.

சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளோம். முழு அடைப்பு நடைபெறும் தினத்தன்று பஸ்கள் போக்குவரத்து இருக்காது. போராட்டத்தை தீவிரமாக நடத்துவோம். அதே போல் பல்லாரி மாவட்டத்தை 2 ஆக பிரிக்கும் முடிவையும் நாங்கள் எதிர்க்கிறோம். விஜயநகர் மாவட்டத்தை மந்திரி ஆனந்த்சிங்கிற்கு வழங்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

நடிகர் முக்கிய மந்திரி சந்துரு, சமூக ஆர்வலரான முன்னாள் மந்திரி லலிதா நாயக், பெங்களூரு வக்கீல்கள் சங்க தலைவர் ரங்கநாத் உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு, முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Tags:    

Similar News