செய்திகள்
எடியூரப்பா

எடியூரப்பா மைசூரு வருகை: போலீஸ் கமிஷனர் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்

Published On 2020-11-25 02:51 GMT   |   Update On 2020-11-25 02:51 GMT
2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்-மந்திரி எடியூரப்பா மைசூருவுக்கு வந்தார். அவர் போலீஸ் கமிஷனர் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
மைசூரு :

கர்நாடக மாநில முதல்-மந்திரி எடியூரப்பா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை மைசூருவுக்கு வந்தார். அவர் மைசூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் போலீஸ்காரர்களுக்கான தங்கும் விடுதி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.

அதையடுத்து மைசூரு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை கூட்டம் நடத்தினார். இன்று(புதன்கிழமை) காலையில் அவர் சுத்தூர் மடத்திற்கு சென்று மடாதிபதிகளை சந்தித்து ஆசி பெறுகிறார். அதையடுத்து மடத்தின் வளாகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.

பின்னர் அவர் டி.நரசிப்புரா தாலுகா முடுக்குதோரே கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்யும் அவர், பின்னர் கோவிலின் புனரமைப்பு பணிகளை தொடங்கி வைக்கிறார். அதையடுத்து அடுத்த மாதம்(டிசம்பர்) நடைபெற இருக்கும் பஞ்சலிங்க தரிசன விழா தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். நாளை(வியாழக்கிழமை) சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு மலை மாதேஸ்வரா கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதையடுத்து கோவிலில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொள்கிறார்.

அதையடுத்து அவர் மைசூருவுக்கு வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வந்தடைகிறார். முதல்-மந்திரி எடியூரப்பாவின் வருகையையொட்டி மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News