செய்திகள்
நிர்மலா சீதாராமன்

இந்தியா, முதலீட்டுக்கு உகந்த நாடாக ஆக்கப்படும் - சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Published On 2020-11-24 22:56 GMT   |   Update On 2020-11-24 22:56 GMT
சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இந்தியா, முதலீட்டுக்கு உகந்த நாடாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
புதுடெல்லி:

இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த தேசிய பன்னாட்டு கம்பெனிகள் மாநாடு நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

இந்தியாவுக்கு வெளியே இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் செயல்படுவதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்த மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. இந்தியாவில் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்திலும் இந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன. வருங்காலத்திலும் இவை தொடரும்.

சீர்திருத்தங்களை தொடருவதற்காக, பங்கு விற்பனைக்கு அழுத்தம் தருவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுத்ததாலும், வரிகள் குறைவாக இருப்பதாலும் இந்தியாவில் தேசிய உள்கட்டமைப்பு திட்டங்களில் கைகோர்க்க பல்வேறு நிதியங்கள் முன்வந்துள்ளன. சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, 6 மாநிலங்களில், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புக்கான சிறப்பு உற்பத்தி மண்டலங்கள் அமைக்கப்படும்.

தற்சார்பு இந்தியா (ஆத்மநிர்பார்) திட்டங்களில், விண்வெளி, அணுசக்தி போன்ற முக்கிய துறைகளும் அன்னிய முதலீட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளன.

முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியாவை தரம் உயர்த்துவோம். அதற்கு கொள்கைகள் சரியாக இருப்பதை உறுதி செய்வோம். நேரடி அன்னிய முதலீட்டு திட்டங்களுக்காக ஒற்றை சாளர முறை, நடப்பு நிதியாண்டில் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News