செய்திகள்
துப்பாக்கிச்சூடு

தானேயில் துணிகரம் - நவநிர்மாண் சேனா பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

Published On 2020-11-23 22:39 GMT   |   Update On 2020-11-23 22:39 GMT
மகாராஷ்டிராவின் தானேயில் நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் நவநிர்மாண் சேனா கட்சியின் வார்டு தலைவராக இருந்து வந்தவர் ஜமீல் ஷேக் (49).

இவர் நேற்று மாலை கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு ராபோடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை நோக்கி தலையில் குறி வைத்து சுட்டார். அதன்பின் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதில் தலையில் குண்டுதுளைத்த நிலையில் ஜமீல் ஷேக் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜூபிடர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய சோதனையில் ஜமீல் ஷேக் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

தகவலறிந்த ராபோடி போலீசார் மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் அவினாஷ் அம்புரே சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த ஜமீல் சேக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் ஹெல்மட் அணிந்த நிலையில் வெகு அருகாமையில் வந்து தலையில் துப்பாக்கியால் சுட்டு சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News