செய்திகள்
நுஸ்ரத் ஜஹான்

’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்

Published On 2020-11-23 16:04 GMT   |   Update On 2020-11-23 16:04 GMT
மதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்த வேண்டாம் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

திருமணத்திற்காக மதம் மாறுவது செல்லாது என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவையடுத்து, உத்தரபிரதேசம், அரியானா, மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் லவ் ஜிகாத்தை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளன. 

ஒரு பெண்ணை மதமாற்றம் செய்யும் நோக்கத்தோடு காதலித்து திருமணம் செய்துகொள்ளுதலே லவ் ஜிகாத் என பலரால் கூறப்படுகிறது. பெண்ணை காதலித்து அவரை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொள்ளுதலே லவ் ஜிகாத் என சிலர் கூறுகின்றனர்.

இதற்கிடையில், இந்த லவ் ஜிகாத்தை தடுக்கும் நடவடிக்கையாக பாஜக ஆளும் மாநிலங்களில் புதிதாக சட்டம் இயற்றை தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்வோருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டுவர பாஜக ஆளும் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது. 

இதையடுத்து, லவ் ஜிகாத் விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில், மேற்குவங்காளத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், நடிகையுமான நுஸ்ரத் ஜஹான் லவ் ஜிகாத் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நுஸ்ரத் ஜஹான் கூறியதாவது:-

காதல் மிகவும் தனிப்பட்டவிருப்பம். காதலும் ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது. தேர்தல் வரும் சமயங்களில் சிலர் இதுபோன்ற செய்திகளை கொண்டு வருகின்றனர். நீங்கள் யாருடன் இருக்கவேண்டும் என்பது அவரவரது தனிப்பட்ட முடிவு.

காதலுடன் இருங்கள். ஒருவரை ஒருவர் காதலிக்கவும் தொடங்குங்கள். மதத்தை ஒரு அரசியல் கருவியாக மாற்றிவிடாதீர்கள்.

என்றார்.
   
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நுஸ்ரத் ஜஹான் ஜெயின் மதத்தை சேர்ந்த நிகில் ஜெயின் என்பவரை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   
Tags:    

Similar News