செய்திகள்
எடியூரப்பா

கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது?: அதிகாரிகளுடன் எடியூரப்பா இன்று ஆலோசனை

Published On 2020-11-23 01:41 GMT   |   Update On 2020-11-23 01:41 GMT
கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது என்பது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (திங்கட்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதில் பள்ளிகள் திறப்பு பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவத் தொடங்கியது.

இதைதொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும், கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையுடனும் நடந்தது. ஆனால் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கிவிட்டன. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில் கர்நாடகத்தில் டிகிரி கல்லூரிகள், என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் கடந்த 17-ந் தேதி திறக்கப்பட்டது. ஆனால் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. கொரோனா பீதி மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே இன்னும் நீங்கவில்லை. ஆயினும் கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு 200-க்கும் மேற்பட்ட மாணவர்களை வைரஸ் தொற்று தாக்கியுள்ளது. இதனால் சக மாணவர்கள் கல்லூரிகளுக்கு வர தயக்கம் காட்டுகிறார்கள். 600 மாணவ-மாணவிகள் கொண்ட கல்லூரியில் சுமார் 50-க்கும் குறைவான மாணவர்களே கல்வி பயில வருகிறார்கள். மற்றவர்கள் ஆன்-லைன் மூலம் பாடம் கற்றலையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. ஆனால் பல்வேறு தரப்பினர் பள்ளிகளை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில் கொரோனா பரவல் இன்னும் ஒழியவில்லை என்றும், இந்த நிலையில் பள்ளிகளை திறந்தால், மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பள்ளிகள் திறப்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளன.

இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் மற்றும் அத்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (திங்கட்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இதில் அதிகாரிகள், பல்வேறு துறை நிபுணர்கள், பெற்றோர் உள்ளிட்டவர்களிடம் சேகரிக்கப்பட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை இன்றைய கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாவிட்டால், கர்நாடகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி அதில் அவர்களின் கருத்துகளை கேட்டு பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்க முதல்-மந்திரி எடியூரப்பா திட்டமிட்டுள்ளார்.

ஆனால், கர்நாடகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அத்துடன் கொரோனா 2-வது அலை வரலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் டிசம்பர் மாதம் இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News