செய்திகள்
குழாய் வழி குடிநீர்

நாட்டில் 2½ கோடி குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் - பிரதமர் மோடி தகவல்

Published On 2020-11-23 00:17 GMT   |   Update On 2020-11-23 00:17 GMT
நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2½ கோடி குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் விந்தியாச்சல் பிராந்தியத்தில் ரூ.5 ஆயிரத்து 555 கோடி மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 995 கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஊரக குடிநீர் வினியோகத் திட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி, காணொலி மூலம் அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

“ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2½ கோடி குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற பெண்களின் வாழ்வு எளிதாகி உள்ளது. மாசடைந்த குடிநீரால் ஏற்படும் காலரா, டைபாய்டு, மூளையில் உண்டாகும் வீக்கம் போன்றவை குறைந்துள்ளன.

உத்தரபிரதேசத்தின் விந்தியாச்சல் பிராந்தியம் சுதந்திரத்துக்கு பின் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய திட்டத்தால் அந்த நிலை மாறும்.

கிராம மக்கள் தங்கள் கிராம முன்னேற்றத்துக்கான முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் பெறும்போது, அதற்காக உழைக்கும்போது அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கிறது. சுயசார்பு கிராமங்கள் என்பது, சுயசார்பு இந்தியாவுக்கு பெரிய விதத்தில் உதவும். முன்பு முக்கியத்துவம் அளிக்கப்படாத கிராம மக்கள், ஏழைகள், பழங்குடியினர் போன்றோருக்கு இன்றைய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுவதன் மூலம் பெண்கள் அடுப்பில் இருந்து கிளம்பும் புகையைச் சுவாசிப்பது தடுக்கப்படுகிறது. இதற்கு முன் நமது பெண்கள், தினமும் 400 சிகரெட்டுகளுக்கு சமமான அடுப்பு புகையைச் சுவாசித்தார்கள். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தால், காடுகள் அழிக்கப்படுவதும் குறைந்திருக்கிறது.

பிரதான் மந்திரி ஆவாஸ் திட்டத்தை பொறுத்தவரையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் என்ன மாதிரியான வீடு கட்டப்பட வேண்டும், என்ன மாதிரியான கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று இப்போது டெல்லியில் முடிவு செய்யப்படுவதில்லை. உதாரணமாக, பழங்குடியின மக்களுக்கான வீடுகள், அவர்களது வாழ்க்கைமுறைக்கு ஏற்பத்தான் கட்டப்பட வேண்டும்.

குடியிருப்பு மற்றும் நில உரிமையாளர்களுக்கு ஸ்வமித்வ திட்டத்தின் மூலம், உறுதிசெய்யப்பட்ட உரிமை பத்திரங்கள் வழங்கப்படுவதால், சொத்துகளுக்கு நிலைத்தன்மையும், நிச்சயத்தன்மையும் ஏற்பட்டிருக்கின்றன. இதனால், ஏழை மக்களின் சொத்துகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படும் நிலை மாறியிருக்கிறது, கடன் பெறுவதற்கு சொத்துகளை அடமானமாக பயன்படுத்தலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

பழங்குடியின மக்கள் நிறைந்த பகுதிகளில் ஏகலைவ்ய மாதிரி பள்ளிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. காடு சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

பழங்குடியின பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்கும் வகையிலும், அந்த பகுதி வளங்களில் இருந்து பெறப்படும் வருவாய் அப்பகுதி மக்களுக்கே பயன்படும் வகையிலும் மாவட்ட கனிமவள நிதி திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்காததால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
Tags:    

Similar News