செய்திகள்
ஜே.பி.நட்டா

ஜே.பி.நட்டா அடுத்த மாதம் முதல் நாடு தழுவிய சுற்றுப்பயணம்

Published On 2020-11-22 23:33 GMT   |   Update On 2020-11-22 23:33 GMT
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அடுத்த மாதம் முதல் 120 நாட்கள் நாடு தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி:

கடந்த பாராளுமன்ற தேர்தல், கடந்த ஆண்டு நடந்தது. அடுத்த பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்கிறது. அதை குறிவைத்து பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இப்போதே நாடுதழுவிய சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

இதுகுறித்து பா.ஜனதா பொதுச்செயலாளர் அருண்சிங் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்காக 120 நாட்கள் நாடுதழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அவரது பயணம் தொடங்குகிறது. அநேகமாக, டிசம்பர் 5-ந் தேதி அவர் பயணம் தொடங்க வாய்ப்புள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா உரிய வெற்றி பெறாத பிராந்தியங்களில் அவர் கவனம் செலுத்துவார்.

அங்கு பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார். கட்சியின் பூத் கமிட்டி தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடுவார்.

பா.ஜனதா வெற்றி பெறாத பிராந்தியங்களிலும், தொகுதிகளிலும் கட்சி அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து வியூகம் வகுப்பார்.

மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு தேர்தலை எதிர்கொள்ள கட்சியின் தயார்நிலை குறித்து ஜே.பி.நட்டா ஆய்வு செய்கிறார்.

பா.ஜனதா ஆளும் மாநிலங்கள், தங்கள் செயல்பாடுகள் மற்றும் மத்திய அரசு திட்டங்களின் அமலாக்கம் குறித்து விளக்கம் அளிக்கும். இந்த சுற்றுப்பயணத்தின்போது, கூட்டணி கட்சிகளையும் நட்டா சந்திப்பார். பொது நிகழ்ச்சிகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளையும் நடத்துவார்.

பெரிய மாநிலங்களில் 3 நாட்களும், மற்ற மாநிலங்களில் 2 நாட்களும் அவர் சுற்றுப்பயணம் செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News