செய்திகள்
கோப்புப்படம்

ரூ.4 ஆயிரம் கோடியில் ஆழ்கடல் திட்டத்தை விரைவில் தொடங்கும் இந்தியா

Published On 2020-11-22 21:56 GMT   |   Update On 2020-11-22 21:56 GMT
இந்திய பெருங்கடலில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆழ்கடல் திட்டத்தை இந்தியா விரைவில் தொடங்க இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி:

மூன்று புறம் கடலால் சூழப்பட்ட தீபகற்ப பகுதியாகும், இந்தியா. பரந்த கடல் எல்லையை கொண்டிருக்கும் இந்தியா, ஆழ்கடல் சார்ந்த ஆய்வுப்பணிகளில் ஈடுபட திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக ஆழ்கடலுக்குள் நீருக்கடியில் குவிந்துள்ள தாதுக்கள், எரிசக்தி போன்றவற்றை ஆய்வு செய்யவும், அங்கு இன்னும் அறியப்படாத பகுதிகளை ஆராயவும் முடிவு செய்துள்ளது. இந்த ஆய்வுப்பணிகளை இந்திய பெருங்கடல் பகுதியில் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக விரிவான திட்டம் ஒன்றை மத்திய அரசு வகுத்துள்ளது. ‘ஆழ்கடல் திட்டம்’ என்ற இந்த திட்டத்துக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதிகள் பெறப்பட்டு வருகின்றன.

இந்த அனுமதிகள் கிடைத்தவுடன் 3 அல்லது 4 மாதங்களில் இந்த பணிகள் தொடங்கப்படும். ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் செலவாகும் இந்த திட்டத்தை மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தலைமை ஏற்று நடத்துகிறது.

அத்துடன் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு கவுன்சில், உயிரி தொழில்நுட்பத்துறை, இஸ்ரோ போன்ற துறைகளும் இந்த திட்டத்தில் இணைந்து செயல்பட உள்ளன. குறிப்பாக இந்த ஆய்வுப்பணிகளுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை டி.ஆர்.டி.ஓ. மற்றும் இஸ்ரோ நிறுவனங்கள் தயாரித்து வழங்கும்.

இந்த திட்டத்துக்காக இந்திய பெருங்கடலின் மத்திய பகுதியில் 1½ லட்சம் சதுர கி.மீ. பரப்பளவை 15 ஆண்டு ஒப்பந்தத்தில் இந்தியா பெற்றிருக்கிறது. இது தொடர்பாக சர்வதேச கடல்பரப்பு ஆணையத்துடன் கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவுக்கு ஒதுக்கியுள்ள அந்த பரப்பில் பன்முக உலோக தாதுக்கள் ஆய்வு உள்ளிட்ட பணிகளை இந்தியா மேற்கொள்ள முடியும். குறிப்பாக இரும்பு, செம்பு, துத்தநாகம், வெள்ளி, தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட தாதுக்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்ய முடியும்.

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா, ஜெர்மனி, கொரியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவும் தனது இருப்பை பதிவு செய்ய முடியும். சீனா தனது ஆழ்கடல் திட்டங்களின் ஒரு பகுதியாக மரியானா அகழியில் ஆய்வு நடத்தும் பணிகளை கடந்த வாரம் நேரலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த ஆழ்கடல் திட்டத்தால் நாட்டின் பரந்த சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்துக்கு மேலும் உத்வேகம் கிடைக் கும்.

இந்த தகவல்களை மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ராஜீவன் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News