செய்திகள்
பாதுகாப்பு படை கண்டுபிடித்த சுரங்கப்பாதை

பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

Published On 2020-11-22 20:52 GMT   |   Update On 2020-11-22 20:52 GMT
நக்ரோடாவில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவிய சுரங்கப்பாதையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.
ஜம்மு:

காஷ்மீரில் இருந்து 4 பயங்கரவாதிகள் பஸ்சில் ஜம்மு நோக்கி வருவதாகவும், அவர்கள் ஜம்முவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு கடந்த வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினர் ஜம்மு நகரை இணைக்கும் ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் நக்ரோடா மாவட்டத்தில் உள்ள வாகன சோதனைச்சாவடி பகுதியில் குவிக்கப்பட்டு நெடுஞ்சாலை முடக்கப்பட்டது.

பாதுகாப்பு படையினர் இருப்பதை அறிந்த பயங்கரவாதிகள் பஸ்சில் இருந்து தப்பித்து அருகில் இருந்த காட்டுப் பகுதியில் பதுங்கி பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் 4 பேரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் என தெரிய வந்தது.

என்கவுண்டர் நடந்த இடத்தில் பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவியது எப்படி என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கிடைத்த சில தகவல்களை பாதுகாப்பு படையினரும், போலீசாரும் பகிர்ந்து கொண்டபோது பயங்கரவாதிகள் ரகசிய சுரங்கப்பாதையை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்பட்டது.

என்கவுண்டர் தளத்திற்கு அருகில், பாகிஸ்தான் எல்லையை கடந்து காஷ்மீர் நோக்கி ஒரு வாகனத்தில் சிலர் பயணித்ததாக அறியப்பட்டது. இதையடுத்து அருகில்தான் சுரங்கப்பாதை இருக்க வேண்டும் என்று யூகித்து, சுரங்கப்பாதையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தொடர் தேடுதல் வேட்டைக்குப் பின்பு, நேற்று ஜம்மு பிராந்தியத்தின் சம்பா பகுதியில் சர்வதேச எல்லைக்கோடு அருகே ஒரு சுரங்கப்பாதை கண்டறியப்பட்டது. 

இதையடுத்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் எல்லை காவல்படை மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரங்கப்பாதையை ஆய்வு செய்தனர்.

அப்போது பேசிய எல்லை பாதுகாப்புப்படை டி.ஜி.பி. தில்பாக் சிங், இந்த சுரங்கம் 150 மீட்டர் நீளம் செல்கிறது. கூடுதல் விவரங்கள் ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News