செய்திகள்
ஜி-20 மாநாடு

பாரிஸ் ஒப்பந்தத்தை விட இந்தியா சிறப்பாக செயலாற்றி வருகிறது - பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2020-11-22 16:59 GMT   |   Update On 2020-11-22 16:59 GMT
பாரிஸ் ஒப்பந்தத்தை பின்பற்றுவது மட்டுமல்லாது, அதை விட சிறப்பாக இந்தியா செயலாற்றி வருவதாக ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

2020-ம் ஆண்டுக்கான ஜி-20 மாநாட்டை சவுதி அரேபி தலைமையேற்று நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான ஜி-20 மாநாடு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

“21 ஆம் நூற்றாண்டின் அனைவருக்குமான வாய்ப்புகளை உணர்ந்துகொள்வது” என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் இந்த மாநாட்டில் 
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நாம் இன்று மக்களையும், பொருளாதாரத்தையும் பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்க முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அதேவேளை பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பருவநிலை மாற்றத்தை எதிர்த்து தனித்து இல்லாமல் ஒருங்கிணைந்து போராட வேண்டும். பாரம்பரிய முறைகளால் ஈர்க்கப்பட்டு குறைந்த கார்பன் வெளியீட்டு முறைகளை இந்தியா பின்பற்றி வருகிறது. இதன்மூலம் பாரீஸ் ஒப்பந்தத்தை பின்பற்றுவதோடு மட்டுமல்லாது, அதை விட சிறப்பாக செயல்படும் நாடாக இந்தியா உள்ளது.

எல்ஈடி விளக்குகளை பிரபலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 8 கோடி குடும்பங்களுக்கு புகையில்லா சமையலறை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

2030-ம் ஆண்டுக்குள் 26 மில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலத்தை மீட்டெடுக்க இந்திய அரசு இலக்கு வைத்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று மனிதகுல வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் ஆகும்.

என்றார்.
Tags:    

Similar News