செய்திகள்
சோனியா-ராகுல்

மாற்றுகட்சியாக உருவெடுக்க உள்கட்சி தேர்தலை நடத்துங்கள் - காங். தலைமையை விமர்சித்த ஆசாத்

Published On 2020-11-22 15:05 GMT   |   Update On 2020-11-22 15:05 GMT
பீகார் தேர்தல் தோல்விக்கு கட்சி தலைமையை குறைகூறமாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சி தலைமையில் பெரும் மாற்றம் வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கடிதம் எழுதினர். அந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடிதம் எழுதியவர்களில் குலாம்நபி ஆசாத்தும் உள்ளடக்கம். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு குலாம்நபி ஆசாத் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேர்தல் தோல்விகள் குறித்து நாங்கள் மிகவும் கவலையடைகிறோம். குறிப்பாக பீகார் மற்றும் இதர இடைத்தேர்தல்கள். இந்த தேர்தல் தோல்விகளுக்கு கட்சி தலைமையை நான் குறைக்கூறவில்லை. மக்களுடனான தொடர்பை எங்கள் கட்சியினர் இழந்துள்ளனர். கட்சியை அனைவரும் நேசிக்க வேண்டும்.

கட்சி பொறுப்பாளர்கள் நியமிக்கப்படும்போது அவர்களுக்கான பொறுப்பு என்ன என்று புரியும். தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் யார் வேண்டுமானாலும் எந்த பொறுப்பையும் பெறமுடியும்.

அனைத்து நிலையிலும் நமது நிர்வாக கட்டமைப்பை எப்போது மாற்றியமைக்கிறோமோ அப்போதுதான் நிலைமை மாறும். கட்சி தலைமை கட்சி தொண்டர்களுக்கு பொறுப்புகள் வழங்க வேண்டும். கட்சி பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை தேர்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும்.

தேர்தல் தோல்விக்கு கட்சி தலைமைதான் பொறுப்பு என நான் அவர்கள் மீது பழிபோடவிரும்பவில்லை. கொரோனா காரணமாக அவர்களால் பெரிதாக ஒன்று செய்யமுடியவில்லை. எங்கள் கோரிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொள்ள தலைமை சம்பதம் தெரிவித்துவிட்டது.

கட்சியை புதுப்பிக்கவும், தேசிய அளவிலான மாற்றுக்கட்சியாக உருவெடுக்கவும் எங்கள் கட்சி தலைமை கட்டாயம் உள்கட்சி தேர்தலை நடத்தவேண்டும்.

என்றார்.
Tags:    

Similar News