செய்திகள்
போராட்டக்களம்

நெடுஞ்சாலை வன்முறையில் ஒருவர் பலி... நீதி விசாரணைக்கு திரிபுரா அரசு உத்தரவு

Published On 2020-11-22 02:54 GMT   |   Update On 2020-11-22 02:54 GMT
திரிபுராவில் புரு அகதிகளின் மறுவாழ்வு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது கடும் வன்முறை வெடித்தது.
அகர்தலா:

மிசோரம் மாநிலத்திலிருந்து திரிபுராவிற்கு இடம்பெயர்ந்த சுமார் 35 ஆயிரம் புரு பழங்குடியின மக்களுக்கு திரிபுராவில் நிரந்தரமாக தங்குவதற்குவதற்கான மறுவாழ்வு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து புரு அகதிகளுக்கான மறுவாழ்வுக்கான பணிகள் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், புது அகதிகளுக்கான மறுவாழ்வு நடவடிக்கையை கண்டித்து வடக்கு திரிபுரா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று பன்சிநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமானோர் ஒன்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது வன்முறை வெடித்தது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். 

நீண்ட நேரம் நீடித்த இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். போராட்டம் நடத்திய பொதுமக்கள் தரப்பில் 19 பேர் காயமடைந்தனர். இதுதவிர 4 போலீஸ்காரர்கள், திரிபுரா மாநில ரைபிள் படையைச் சேர்ந்த 3 வீரர்கள், தீயணைப்பு படையின் 8 வீரர்கள் என மொத்தம் 34 பேர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 

பன்சிநகர், கஞ்சன்பூர் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News