செய்திகள்
பசு

ஒரே நாளில் கால்நடை பண்ணையில் 78 பசுக்கள் பலி - ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

Published On 2020-11-21 22:49 GMT   |   Update On 2020-11-21 22:49 GMT
ராஜஸ்தானில் கால்நடை பண்ணையில் ஒரே நாளில் 78 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்துக்கு உட்பட்ட சர்தார்ஷகார் அருகே உள்ள பிலியுபாஸ் ராம்புரா கிராமத்தில் அரசு உதவி பெறும் கால்நடை பண்ணை ஒன்று உள்ளது. தனியார் பராமரித்து வரும் இந்த பண்ணையில் ஏராளமான பசுக்கள் உள்ளன.

இங்கு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை 78 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. மேலும் சில பசுக்கள் நோய்வாய்ப்பட்டு உள்ளன.

ஒரே நாளில் நிகழ்ந்த இந்த 78 பசுக்களின் மரணத்துக்கான காரணம் குறித்து மாநில கால்நடைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பசுக்களுக்கு வழங்கப்பட்ட தீவனத்தின் மாதிரியை எடுத்து ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் அவை உண்ட உணவு விஷமாக மாறியதால் இந்த பரிதாபம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நாளில் 78 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News