செய்திகள்
வகுப்பறை (கோப்பு படம்)

குஜராத்தில் பள்ளி, கல்லூரிகள் 23ம் தேதி திறக்கப்படாது -முடிவை மாற்றியது அரசு

Published On 2020-11-20 04:46 GMT   |   Update On 2020-11-20 04:46 GMT
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் குஜராத் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை 23ம் தேதி திறக்கும் முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்:

கொரோனா பாதிப்பு நிலவரங்களுக்கு ஏற்ப, மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் கல்வி நிறுவனங்களை திறக்கும் முடிவை எடுக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் குறைந்ததையடுத்து, கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எனினும், கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டதால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

அவ்வகையில், குஜராத் மாநிலத்தில் நவம்பர் 23ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து அதற்கான உத்தரவு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்தது. அதன்படி பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், கொரோனா பரவல் மேலும் அதிகரித்ததை பரிசீலனை செய்த அரசு, வரும் 23ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என நேற்று அறிவித்தது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான முந்தைய உத்தரவை ரத்து செய்தது.

குஜராத் மாநிலத்தில் இதுவரை 1.92 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1340 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, 7 பேர் இறந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3830 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News