செய்திகள்
கோப்புப்படம்

உலக அளவில் லஞ்சத்தில் இந்தியாவுக்கு 77-வது இடம்

Published On 2020-11-19 19:41 GMT   |   Update On 2020-11-19 19:41 GMT
உலக அளவில் லஞ்சத்தில் இந்தியா 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 48 புள்ளிகளுடன் 78-வது இடத்தில் இருந்தது.
புதுடெல்லி:

அமெரிக்காவில் மேரிலாந்து மாகாணத்தில் அன்னாபொலிஸ் நகரில் டிரேஸ் லஞ்ச இடர் மேட்ரிக்ஸ் அமைப்பு செயல்படுகிறது.

லஞ்ச ஒழிப்பு அமைப்பான இந்த அமைப்பு, அரசுடன் தொழில் தொடர்புகள், லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கல், அரசு மற்றும் சிவில் சேவை வெளிப்படைத்தன்மை, ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் சிவில் சமூக மேற்பார்வை திறன் ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் உலகளவில் இந்தியா உள்ளிட்ட 194 நாடுகளில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தை மதிப்பிட்டு பட்டியலிட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியா 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 48 புள்ளிகளுடன் 78-வது இடத்தில் இருந்தது.

இந்த ஆண்டு தரவுகள்படி, வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தென்சூடான், வெனிசூலா, எரித்ரியா ஆகியவை தொழில் ரீதியிலான லஞ்ச ஆபத்தை அதிகம் கொண்டுள்ளன.

லஞ்சம் குறைவாக உள்ள நாடுகள் என்று பார்த்தால் அந்தப் பெருமை, டென்மார்க், நார்வே, சுவீடன் மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றுக்கு கிடைத்துள்ளது.

பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது.

ஆனால் பூடான் 37 புள்ளிகளுடன் 48-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சீனா, தனது அதிகார வர்க்கத்தை தொடர்ந்து ஒழுங்குபடுத்துவதின் மூலம் அரசு அதிகாரிகளின் லஞ்ச கோரிக்கை வாய்ப்புகளை குறைத்துள்ளது என டிரேஸ் லஞ்ச இடர் மேட்ரிக்ஸ் அமைப்பு கூறி உள்ளது.
Tags:    

Similar News