செய்திகள்
பிரிதிவிராஜ் சாவான்

முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவானுக்கு வருமான வரி நோட்டீஸ்

Published On 2020-11-19 03:44 GMT   |   Update On 2020-11-19 03:44 GMT
மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சாவனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கு நான் முறையாக பதில் அளிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
மும்பை :

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆட்சி காலத்தில் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் பிரிதிவிராஜ் சவான். இவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்பட்டது.

இந்த தகவலை பிரிதிவிராஜ் சவானே நேற்று உறுதி செய்தார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு வருமான வரித்துறை மூலமாக எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவாருக்கு அனுப்பப்பட்டதை போன்ற நோட்டீஸ் என்று தான் நினைக்கிறேன்.

இதுபோன்ற நோட்டீஸ்கள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மட்டும் அனுப்பப்படுகிறது. அப்படி எந்த நோட்டீசும் ஆளும் பாரதீய ஜனதா தலைவர்களுக்கு அனுப்பப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. எனக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கு நான் முறையாக பதில் அளிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இருப்பினும் எதற்காக தனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

வருமான வரித்துறை கடந்த செப்டம்பர் மாதம் தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவருக்கு, தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்கள் குறித்து பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News