செய்திகள்
எடியூரப்பா

முழு அடைப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை: எடியூரப்பா எச்சரிக்கை

Published On 2020-11-19 03:13 GMT   |   Update On 2020-11-19 03:13 GMT
கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் வசிக்கும் மராட்டிய மக்களின் மேம்பாட்டிற்காக மராட்டிய மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் பெலகாவியை சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், எடியூரப்பாவின் இந்த அறிவுப்புக்கு கன்னட சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த முடிவை வாபஸ் பெற கோரி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு, வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி முழு அடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு கன்னட சங்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளன.

இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில், மராட்டிய மேம்பாட்டு ஆணையம் என்பதற்கு பதிலாக மராட்டிய சமூக மக்கள் மேம்பாட்டு கழகம் என்று பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடகத்தில் வசிக்கும் மராட்டியர்களின் மேம்பாட்டிற்காக இந்த கழகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதை வாபஸ் பெறும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெலகாவியில் உலக கன்னட மாநாடு கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் அந்த பகுதியில் வசிக்கும் மராட்டிய மக்கள் அதிகளவில் வந்து கலந்து கொண்டனர். இதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் வசிக்கும் மராட்டியர்களும் கன்னடர்களே. அவர்களின் மேம்பாட்டிற்காக மராட்டிய சமூக மேம்பாட்டு கழகம் அமைக்க முடிவு செய்துள்ளோம். இதை சிலர் எதிர்க்கிறார்கள். இது சரியல்ல. வருகிற 5-ந் தேதி முழு அடைப்பு நடத்துவதாக கூறியுள்ளனர்.

இதை அரசு அனுமதிக்காது. முழு அடைப்பு நடத்தினால் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்க நான் இன்று (அதாவது நேற்று) டெல்லி செல்கிறேன். அங்கு எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து இதுகுறித்து ஆலோசிக்க இருக்கிறேன். அதன் பிறகு இரவே பெங்களூரு திரும்புகிறேன். கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் 7-ந் தேதி தொடங்குகிறது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Tags:    

Similar News