செய்திகள்
நிலநடுக்கம்

சித்தூர் அருகே 6 கிராமங்களில் இரவில் திடீர் நிலநடுக்கம்

Published On 2020-11-18 08:03 GMT   |   Update On 2020-11-18 08:03 GMT
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதியில் மக்கள் விடிய விடிய வீதியில் காத்திருந்தனர்.
திருமலை:

சித்தூர் அடுத்த சோமலே மண்டலம் சின்ன உப்பரபள்ளி, எல்லப்பள்ளி, கம்பள்ளி, நஞ்சம்பேட்டை, திகிலா வீதி, எஸ்.டி.காலனி உள்ளிட்ட 6 கிராமங்களில் நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் அதிர்வில் வீட்டில் இருந்த பாத்திரங்கள், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் உருண்டு கீழே விழுந்தன.

மேலும் வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த பொதுமக்கள் வீட்டில் இருந்த குழந்தைகள் முதியவர்களை அழைத்து கொண்டு அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

நிலநடுக்கம் காரணமாக வீடுகள் இடிந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் முதியவர்களுடன் விடிய விடிய வீட்டிற்கு வெளியே வீதியில் பொதுமக்கள் காத்திருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அந்த பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு நிலநடுக்கம் குறித்த அச்சத்தை போக்கினர்.

இதையடுத்து இன்று காலை பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு சென்றனர். சித்தூர் அருகே திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News