செய்திகள்
பைசர்

அமெரிக்க கொரோனா தடுப்பூசியை சேமித்து வைப்பது சவாலாக இருக்கும் - மத்திய அரசு கருத்து

Published On 2020-11-17 20:56 GMT   |   Update On 2020-11-17 20:56 GMT
மிகக்குறைந்த வெப்பநிலையில், பைசர் என்ற அமெரிக்க நிறுவனத்தின் தடுப்பூசியை சேமித்து வைப்பது சவாலாக இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான தேசிய சிறப்பு குழுவின் தலைவராக ‘நிதி ஆயோக்’ அமைப்பின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் செயல்பட்டு வருகிறார். அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனம், தங்களது கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருப்பதாக கூறியுள்ளது. அதுபோல், மாடர்னா நிறுவனம், தங்களது தடுப்பூசி 94.5 சதவீதம் செயல்திறன் கொண்டதாக கூறியுள்ளது.

2 நிறுவனங்களும் இன்னும் தங்களது தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் பெறவில்லை. நிலைமையை கண்காணித்து வருகிறோம்.

கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன், அதை கொள்முதல் செய்யவும், வினியோகம் செய்யவும் வியூகம் வகுப்போம். அதற்கான தேசிய திட்டம், இறுதிக்கட்ட தயாரிப்பு நிலையில் இருக்கிறது.

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி, இந்தியாவுக்கு வர பல மாதங்கள் ஆகலாம். இந்திய மக்கள்தொகைக்கு தேவையான போதிய டோஸ் தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை.

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை குளிர்பதன கிடங்குகளில் மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் என்ற மிகக்குறைந்த வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும். இதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். எந்த நாட்டுக்கும் இது சாத்தியம் அல்ல.

இருப்பினும், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வியூகம் வகுப்போம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் 5 கொரோனா தடுப்பூசிகள், பரிசோதனையின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. அவை வெற்றி பெறும் என்று நம்புகிறோம். போதிய எண்ணிக்கையில் டோஸ்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

குறிப்பாக, சீரம் இன்ஸ்டிடியூட்டின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை நிறைவடையும் நிலையில் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News