செய்திகள்
பிரச்சார மேடையில் நிதிஷ் குமார், மோடி

பீகார் சட்டசபையில் ஆதிக்கம்... மூன்று முக்கிய பதவிகளை பெறுகிறது பாஜக

Published On 2020-11-16 05:32 GMT   |   Update On 2020-11-16 05:32 GMT
பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இன்று பதவியேற்கும்போது, அவருடன் பாஜகவை சேர்ந்த 2 துணை முதல்வர்களும் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி மெஜாரிட்டி பெற்றது. இந்த கூட்டணியில் பாஜக அதிகபட்சமாக 74 இடங்களில் வெற்றி பெற்றது. வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து புதிய அரசு பதவியேற்பதற்கான நடைமுறைகள் தொடங்கின.

பாட்னாவில் உள்ள நிதிஷ் குமார் இல்லத்தில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்றக் குழு தலைவராக (முதல்வர்) நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இக்கூட்டம் நிறைவடைந்ததும் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்த நிதிஷ் குமார், தன்னை ஆட்சியமைக்க அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்தார். ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து பாட்னாவில் இன்று பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. விழாவில் மத்திய உள்துறை மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். 

ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் பதவியேற்பு விழா நிதிஷ் குமாருடன் பாஜகவைச் சேர்ந்த 2 பேர் துணை முதல்வராக பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே  நேரம், எந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்பட்டுள்ளன, யாரெல்லாம் பதவியேற்பார்கள் என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஆட்சியில் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுசில் குமார் மோடியை சேர்த்து மொத்தம் 30 அமைச்சர்கள் இருந்தனர். இதில், 18 பேர் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தவர்கள். 12 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். தற்போது, பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அதற்கு அதிக அமைச்சர்கள் பதவி கிடைக்க உள்ளது. கடந்த முறை 71 ஆக இருந்த ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ.க்கள் பலம், இம்முறை 43 ஆக குறைந்துள்ளது. இதனால், இக்கட்சிக்கு குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்படும் என கருதப்படுகிறது. ஆட்சியை பிடிக்க முக்கிய பங்கு வகித்த கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பீகார் தேர்தலில் இம்முறை பாஜக அதிக இடங்களை பிடித்துள்ளதால், 2 துணை முதல்வர்கள் பதவிகள், சபாநாயகர் பதவி மற்றும் முக்கிய இலாகாக்களை அக்கட்சி பெறும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று இரவு நிதிஷ் குமார் மற்றும் மூத்த பாஜக தலைவர்கள் இடையிலான சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜகவின் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்கிஷோர் பிரசாத், துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News