செய்திகள்
முதல்-மந்திரி ஆதித்யநாத்

அயோத்தி தீப உற்சவம், மிகப்பெரிய வெற்றி : முதல்-மந்திரி ஆதித்யநாத் பெருமிதம்

Published On 2020-11-15 23:28 GMT   |   Update On 2020-11-15 23:28 GMT
அயோத்தி நகரம் முழுவதையும் பரவசத்தில் ஆழ்த்திய இந்த தீப உற்சவ நிகழ்ச்சி மிகப்பெரும் வெற்றி பெற்றிருப்பதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
அயோத்தி:

ராமபிரான் வனவாசம் முடித்து நாடு திரும்பிய நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்தினம் தீப உற்சவமாக அயோத்தியில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுவிடும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சத்தால், தீப உற்சவம் வழக்கமான ஆரவாரத்துடன் நடைபெறுமா? என்ற சந்தேகம் காணப்பட்டது. எனினும் எந்தவித தடங்கலும் இன்றி தீப உற்சவம் நேற்று முன்தினம் அயோத்தியில் களைகட்டியது.

சரயு நதிக்கரை நெடுகிலும் மக்கள் லட்சக்கணக்கான தீபங்களை ஏற்றி ராமபிரானை வழிபட்டனர். மொத்தம் 6 லட்சத்து 6 ஆயிரத்து 569 விளக்குகள் ஏற்றப்பட்டன. இது ராமபிரானின் பக்தர்களுக்கும், சுற்றுலாவாசிகளுக்கும் மிகுந்த களிப்பூட்டியது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் ஏற்றப்பட்ட இந்த தீப உற்சவ நிகழ்ச்சி, ஏற்கனவே படைக்கப்பட்டிருந்த கின்னஸ் சாதனையையும் முறியடித்து புதிய சாதனையை படைத்தது.

இதைத்தவிர கொரோனா அச்சத்தால் மெய்நிகர் முறையில் மக்கள் 10 லட்சத்துக்கும் மேலான விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். இதற்காக இணையதளம் ஒன்றும் உருவாக்கப்பட்டு இருந்தது.

மொத்தத்தில் அயோத்தி நகரம் முழுவதையும் பரவசத்தில் ஆழ்த்திய இந்த தீப உற்சவ நிகழ்ச்சி மிகப்பெரும் வெற்றி பெற்றிருப்பதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு இந்த சாதனையும் முறியடிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News