பீகார் மாநில தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்றக் குழு தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு- பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார் நிதிஷ் குமார்
பதிவு: நவம்பர் 15, 2020 14:02
தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டம்
பாட்னா:
பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த கூட்டணில், பா.ஜ.க. 74 இடங்களில் வென்று மாநிலத்தில் இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக வந்தது. அதன் கூட்டணி கட்சிகளான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.
சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை விட 31 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக பெற்றிருந்தாலும், ஏற்கனவே அந்த கட்சியின் தலைமை அளித்த வாக்குறுதியின்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தான் முதல் மந்திரி பதவியை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. இதனால் அவரை முறைப்படி சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கின.
முன்னதாக கவர்னர் பாகு சவுகானை நிதிஷ்குமார் சந்தித்து தனது மந்திரி சபையின் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். மேலும், சட்டசபையை கலைக்கக் கோரும் சிபாரிசை அளித்தார். நிதிஷ்குமாரின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு பதவி ஏற்கும்வரை இடைக்கால முதல் மந்திரியாக நீடிக்குமாறு நிதிஷ்குமாரை கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பாட்னாவில் உள்ள நிதிஷ் குமார் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜகவின் மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், பட்னாவிஸ் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்றக் குழு தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்மூலம் நிதிஷ் குமார் 7வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்க உள்ளார். தொடர்ந்து 4வது முறையாக முதல்வராகிறார். நாளை காலை 11.30 மணியளவில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :