டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவாகியுள்ளது.
தடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மிக மோசம் - டெல்லி மக்கள் அவதி
பதிவு: நவம்பர் 15, 2020 06:42
மோசமான காற்றின் தரம்
புதுடெல்லி:
டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது.
தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் வரும் 30-ம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று டெல்லியில் தடை மீறி பல இடங்களில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தனர். இதன் காரணமாக டெல்லி நகரத்தில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரம் குறித்த ஆய்வில் டெல்லியின் அருகே உள்ள பரீதாபாத், காஜியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, குருகிராம் ஆகியவற்றிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவானது.
டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தைத் தாண்டியதால் டெல்லி முழுவதும் எந்திரங்கள் மூலம் உயர் கட்டிடங்கள் மற்றும் மரங்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. காற்றின் தரம் குறைவால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :