செய்திகள்
வெள்ள பாதிப்பு

இயற்கை சீற்றத்தால் பாதிப்பு அடைந்த 6 மாநிலங்களுக்கு ரூ.4,382 கோடி நிதி உதவி

Published On 2020-11-14 00:18 GMT   |   Update On 2020-11-14 00:18 GMT
இயற்கை சீற்றங்களின்போது ஏற்பட்ட சேதங்களுக்காக கர்நாடகா உள்பட 6 மாநிலங்களுக்கு ரூ.4 ஆயிரத்து 382 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

மேற்கு வங்காளம், ஒடிசா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சிக்கிம் ஆகிய 6 மாநிலங்கள் இந்த ஆண்டில் புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களால் பெரிதும் சேதத்தை சந்தித்தன.

இந்த சேதங்களை ஈடுகட்ட மேற்கண்ட 6 மாநிலங்களுக்கும் மத்திய நிதி உதவியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 ஆயிரத்து 382 கோடியை மத்திய அரசு விடுவிக்க உள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு இதற்கு ஒப்புதல் அளித்தது.

அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்துக்கு ரூ.2 ஆயிரத்து 707 கோடியே 77 லட்சமும், ஒடிசாவுக்கு ரூ.128 கோடியே 23 லட்சமும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ரூ.268 கோடியே 59 லட்சம் விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையின்போது வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவுக்கு ரூ.577 கோடியே 84 லட்சமும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.611 கோடியே 61 லட்சமும், சிக்கிமுக்கு ரூ.87 கோடியே 84 லட்சமும் விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மாநிலங்களில் மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அம்பான் புயல் பாதிப்பை பிரதமர் மோடி கடந்த மே மாதம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, முன்பணமாக மேற்கு வங்காளத்துக்கு ரூ.1,000 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.500 கோடியும் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.

ஆறு மாநிலங்களிலும் மத்திய குழுக்கள் ஆய்வுப்பணியை மேற்கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Tags:    

Similar News