செய்திகள்
பட்டாசு

நாளை தீபாவளி- கடைசி நேரத்தில் பட்டாசுகளுக்கு தடை விதித்தது தெலுங்கானா அரசு

Published On 2020-11-13 05:28 GMT   |   Update On 2020-11-13 05:28 GMT
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பட்டாசு விற்பனை தொடங்கி உள்ளது. ஆனால் கொரோனா பரவல் மற்றும் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் டெல்லி, கர்நாடகா, சண்டிகர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தீபாவளியன்று பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கும்படி மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. தீபாவளிக்காக ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் பட்டாசுகளையும் வெடிக்கக் கூடாது என ஐகோர்ட் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.

இதனையடுத்து பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிக்க தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பட்டாசு விற்பனை செய்யும் அனைத்து கடைகளையும் மூட உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அரசுத் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பட்டாசு விற்பனை கடைகளை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் பட்டாசுகளை வாங்கிவிட்டனர். கடைசி நேரத்தில் அவற்றை வெடிக்கக் கூடாது என்று கூறியிருப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 
Tags:    

Similar News