செய்திகள்
சந்திரகாந்த் பாட்டீல்

சிவசேனா கூட்டணி ஆட்சி அடுத்த 4 ஆண்டுகளை நிறைவு செய்யாது - சந்திரகாந்த் பாட்டீல்

Published On 2020-11-12 23:31 GMT   |   Update On 2020-11-12 23:31 GMT
சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி அடுத்த 4 ஆண்டுகளை நிறைவு செய்யாது என மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு தேர்தலுக்கு பிறகு முதல் மந்திரி பதவி போட்டியால் பாரதிய ஜனதா, சிவசேனா இடையிலான கூட்டணி முறிந்தது.

இதை தொடர்ந்து சிவசேனா கட்சி கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தது. இந்தக் கூட்டணி ஆட்சியை பிடித்து இந்த மாதத்துடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தற்போது தேர்தல் நடந்தால் 1,000 பேரில் 900 ஆயிரம் பேர் நாங்கள் பாஜகவிற்கு தான் வாக்களிப்போம் என்று உறுதியாக கூறுவார்கள்.

நாங்கள் அடுத்த 4 ஆண்டுகளும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பிரதான எதிர்க்கட்சியாக பணியாற்ற தயாராக இருக்கிறோம். ஆனால் இந்த அரசு அடுத்த 4 ஆண்டுகளை கண்டிப்பாக நிறைவு செய்யாது.

நாங்கள் அரசியலமைப்புக்கு எதிராக எப்போதும் செயல்பட்டது கிடையாது. அரசை கவிழ்ப்பது எங்களின் கலாசாரம் கிடையாது.

ஆனால் மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடந்துவரும் அட்டூழியங்கள் காரணமாக இந்த அரசு பதவி விலகவேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

ஜல்காவ் மாவட்டம் பரோலா தாலுகாவில் சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டுள்ளாள். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராசில் நடந்த கற்பழிப்பு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஹத்ராசுக்கு சென்றதுபோல இங்குவந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை வந்து சந்திப்பார்களா? என கேள்வி எழுப்பினார்.
Tags:    

Similar News