செய்திகள்
தேஜஸ்வி யாதவ்

நிதிஷ் மாநிலத்தை ஆளலாம்... ஆனால் நாங்கள் மக்களின் இதயங்களை ஆள்கிறோம் -தேஜஸ்வி

Published On 2020-11-12 10:00 GMT   |   Update On 2020-11-12 10:00 GMT
மக்களின் தீர்ப்பு மெகா கூட்டணிக்கு சாதகமாக இருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக இருந்ததாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.
பாட்னா:

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. மெகா கூட்டணி 110 தொகுதிகளை கைப்பற்றியது. எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 75 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கும் இடையில் உள்ள வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவு.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முதல் முறையாக ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் கட்சிக்கு வாக்களித்த பீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் தீர்ப்பு மெகா கூட்டணிக்கு சாதகமாக இருந்தது, ஆனால் தேர்தல் ஆணையத்தின் முடிவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது. 

இதுபோன்று நடப்பது இது முதல் முறையல்ல. 2015 ஆம் ஆண்டில் மெகா கூட்டணி உருவானபோது, வாக்குகள் எங்களுக்கு ஆதரவாக இருந்தன, ஆனால் பாஜக பின்வாசல் வழியாக நுழைந்து அதிகாரத்தைப் பெற்றது.

இந்த தேர்தலில் 20 தொகுதிகளில் நாங்கள் மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளோம். பல தொகுதிகளில் 900க்கும் மேற்பட்ட தபால் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை மறுபடியும் எண்ண வேண்டும். தபால்  வாக்குகளுக்கு மதிப்பு இல்லை என்றால், நம்மிடம் ஏன் அது இருக்கிறது? வாக்கு எண்ணிக்கை "ஒருவரின் செல்வாக்கின் கீழ்" நடைபெற்றது.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மெகா கூட்டணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 12270 தான். மெகா கூட்டணியை விட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 12,270 வாக்குகள் மட்டுமே பெற்றபோதிலும், எங்களைவிட கூடுதலாக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது வியப்பாக இருக்கிறது. நிதிஷ் குமார் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்யலாம், ஆனால் நாங்கள் மக்களின் இதயங்களை ஆள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News