செய்திகள்
சிடி ரவி

தமிழகம்-புதுச்சேரியில் பாஜகவை மலர செய்வதே அடுத்த இலக்கு: சி.டி.ரவி

Published On 2020-11-12 02:03 GMT   |   Update On 2020-11-12 02:03 GMT
பீகாரை தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சியை மலர செய்வதே அடுத்த இலக்கு என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறினார்.
பெங்களூரு :

பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பீகார் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளை மக்கள் ஆதரித்துள்ளனர். கொரோனா பீதிக்கு மத்தியிலும் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் தொண்டர்களை ஒருங்கிணைத்து வெற்றிக்காக உழைத்த எங்கள் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

பீகாரில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பா.ஜனதா, ஐக்கிய ஜனதா தளத்துடன் சேர்ந்து நல்லாட்சி நடத்தியது. அதற்கு மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளனர். பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை எங்குள்ளது என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மக்கள் பீகார் தேர்தல் மூலம் நல்ல பதில் கொடுத்துள்ளனர். கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் இப்போதாவது இதை புரிந்து கொள்வார் என்று கருதுகிறேன். ஒருவேளை அவருக்கு இது புரியவில்லை என்றால் அவருக்கு ஏதோ பிரச்சினை உள்ளது என்று அர்த்தம்.

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் பா.ஜனதா வென்றுள்ளது. தெலுங்கானாவில் ஒரு தொகுதியில் எங்கள் கட்சி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. தேசிய அளவில் 53 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 44 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு டி.கே.சிவக்குமார், சித்தராமையா பொறுப்பேற்க வேண்டும். பீகாரில் ஒருவேளை எங்கள் கூட்டணி தோற்று இருந்தால், பிரதமர் மோடியை ராஜினாமா செய்யுமாறு எதிர்க்கட்சிகள் கேட்டு இருக்கும். ஆனால் வாக்காளர்கள் எங்களின் தன்னம்பிக்கையை இரட்டிப்பாக்கி உள்ளனர். பீகாரை தொடர்ந்து மேற்கு வங்காளம், தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் தான் எங்களின் அடுத்த இலக்கு.

சிரா தொகுதியில் பா.ஜனதா வெற்றிக்கு நானே காரணம் என்று விஜயேந்திரா எங்கும் கூறவில்லை. ஆனால் அவரது உழைப்புக்கு அதிக நற்பெயர் வழங்கினால் தவறு இல்லை. காலியாக இல்லாத முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரசில் போட்டி போட்டனர். அவர்களுக்கு இடைத்தேர்தல் மூலம் மக்கள் தக்க பதில் கொடுத்துள்ளனர். தோல்வி அடைந்ததால், அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றதாக பா.ஜனதா மீது குறை கூறுகிறார்கள்.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.
Tags:    

Similar News