செய்திகள்
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதி

மத்தியபிரதேச இடைத்தேர்தல்: முன்னிலையில் பாஜக - ஆட்சியை தக்கவைப்பாரா சிவராஜ்சிங்?

Published On 2020-11-10 06:39 GMT   |   Update On 2020-11-10 06:39 GMT
மத்தியபிரதேச இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
போபால்:

230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்யா சிந்தியா போர்க்கொடி உயர்த்தினார். 

ஜோதிர் ஆதித்யாவுக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். அவர்களை தொடர்ந்து மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர். 

இதனால், மத்தியபிரதேச காங்கிரஸ் அரசு கவிழ்ந்து சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை கைப்பற்றியது. இதன் விளைவாக ஏற்கனவே காலியாக இருந்த 3 இடங்களையும் சேர்த்து மொத்தம் 28 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 9 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்ற 116 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். தற்போது பாஜக எம்.எல்.ஏ.க்களின் பலம் 107 ஆக உள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக கூட்டணிக்கு இன்னும் 9 இடங்கள் மட்டுமே தேவை.

ஆனால், 88 எம்.எல்.ஏ.க்களை தங்கள் கைவசம் வைத்துள்ள காங்கிரஸ் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற போட்டியிடும் 28 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும் அல்லது குறைந்தது 21 தொகுதிகளில் வெற்றிபெற்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்கலாம்.

தற்போது வெளியான முன்னனி நிலவரத்தின் மூலம் பாஜக தனது ஆட்சியை தக்கவைத்துள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News