செய்திகள்
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..

பீகார்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை - முன்னிலை நிலவரம்

Published On 2020-11-10 02:59 GMT   |   Update On 2020-11-10 02:59 GMT
பீகார் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
பாட்னா:

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 3-ம் தேதியும் நடைபெற்றது. மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் 7-ம் தேதி நடந்து முடிந்துள்ளது.
 
இந்த தேர்தலில் மொத்தம் 57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளனர். 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

பீகார் தேர்தலில் தற்போது முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்துள்ளது.

இந்த கூட்டணியை எதிர்த்து லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இதேபோல் ஆளும் பாஜக-ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய ஜனநாயக கூட்டணியில்( என்டிஏ) இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி சிரங் பாஸ்வான் தலைமையில் தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது. 

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 முதல் தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. தற்போதைய ஆர்ஜேடி கூட்டணி 16 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான கூட்டணி 10 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.  

பீகாரை போலவே மத்தியபிரதேசத்தில் பதிவான இடைத்தேர்தல் வாக்குகளும் எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

பீகார் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தொடர்பாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிர ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்து அமைத்துள்ள மெகா கூட்டணியே ஆட்சியை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

அதேபோல், 230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்யா சிந்தியா போர்க்கொடி உயர்த்தினார். ஜோதிர் ஆதித்யாவுக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியில் இருந்து விலகினர்.  

இதையடுத்து, ஜோதிர் ஆதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். அவர்களை தொடர்ந்து மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர். 

இதனால், மத்தியபிரதேச காங்கிரஸ் அரசு கவிழ்ந்து சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை கைப்பற்றியது. இதன் விளைவாக ஏற்கனவே காலியாக இருந்த 3 இடங்களை சேர்த்து மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகிறது. 

மத்தியபிரதேசத்தில் தற்போது பாஜக எம்.எல்.ஏ.க்களின் பலம் 107 ஆக உள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக கூட்டணிக்கு இன்னும் 9 இடங்கள் மட்டுமே தேவை. 

ஆனால், 88 எம்.எல்.ஏ.க்களை தங்கள் கைவசம் வைத்துள்ள காங்கிரஸ் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற போட்டியிடும் 28 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும் அல்லது குறைந்தது 21 தொகுதிகளில் வெற்றிபெற்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்கலாம்.

மத்திய பிரதேச இடைத்தேர்தல் உள்பட நாடு முழுவதும் 11 மாநிலங்களில் மொத்தம் 58 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News