செய்திகள்
அர்னாப் கோஸ்வாமி

ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு - அலிபாக் கோர்ட்டை நாடிய அர்னாப் கோஸ்வாமி

Published On 2020-11-09 10:18 GMT   |   Update On 2020-11-09 10:49 GMT
சிறையில் உள்ள ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அலிபாக் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மும்பை:

ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்தவா் கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் (53). இவருக்கு கட்டிட உள்வடிவமைப்பு பணிகள் செய்ததற்கான நிலுவை தொகையை ரிபப்ளிக் டி.வி. ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி(47) வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. 

கடந்த 2018-ம் ஆண்டு அன்வய் நாயக் அலிபாக்கில் உள்ள வீட்டில் தாயுடன் தற்கொலை செய்து கொண்டார். மூடப்பட்ட இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசாருக்கு மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து, கடந்த வாரம் புதன்கிழமை அதிகாலை அலிபாக் போலீசார் மும்பை லோயர் பரேலில் உள்ள அர்னாப் கோஸ்வாமியின் வீட்டுக்கு சென்று கட்டிட வடிவமைப்பாளர் மற்றும் அவரது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக, அவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பெரோஸ் சேக், நிதேஷ் சர்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இதில் 3 பேரையும் வருகிற 18-ம் தேதி வரை கோர்ட்டு காவலில் அடைக்க அலிபாக் கோர்ட்டு உத்தரவிட்டது. அவர்கள் 3 பேரும் கொரோனாவை தொடர்ந்து அலிபாக்கில் உள்ள பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். 

ஆனால், போலீசாருக்கு தெரியாமல் அங்கு கோஸ்வாமி செல்போன் பயன்படுத்தியதால் ரைகாட் மாவட்டத்தில் உள்ள டலோஜா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.  

இதற்கிடையே, தனக்கு ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டில் அர்னாப் கோஸ்வாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் அடங்கிய அமர்வு அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. 

மாறாக கோஸ்வாமி ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என கூறி உத்தரவிட்டது. மேலும், ஜாமீன் கிடைக்கும் வரை அவர் தொடர்ந்து சிறையிலேயே இருக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், மும்பை ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து சிறையில் உள்ள ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அலிபாக் கீழமை நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.  

கோஸ்வாமி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறலாம் எனவும், ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News